ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் தற்போது திருச்சி பொன்னேரியில் வசித்து வருகிறார். இவரது மகள் ரிப்னா ஷெரின் முருங்கைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்.
நேற்று காலை மகளை கல்லூரியில் விடுவதற்காக மகளுடன் கம்பரசம்பேட்டை அருகே திருச்சி - கரூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கி ரிப்னா ஷெரின் படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே பலியானாள். தகவல் அறிந்து சென்ற ஜீயபுரம் போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி கைது செய்யப்பட்டார்.