திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல்; 1500 கிலோ அரிசி பறிமுதல்

63பார்த்தது
திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல்; 1500 கிலோ அரிசி பறிமுதல்
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி. சியாம்ளாதேவி உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர். வின்சென்ட் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், துவாக்குடி, வாழவந்தான்கோட்டை எழில் நகர், வேங்கூர், கூத்தைப்பார் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். வேங்கூர் சாலையில் கூத்தைப்பார் பொன் அரசு காத்த அம்மன் கோயில் அருகில் வாகனத்தணிக்கை மேற்கொண்டனர். 

அப்போது, அங்கு வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 30 மூட்டைகளில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் அந்தநல்லூர் அருகே உள்ள திண்டுக்கரை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த ம. முருகானந்தம் (வயது 23) என்பதும், வேங்கூர் கூத்தைப்பார் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, திருவெறும்பூர் பகுதியில் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில ஒப்பந்த பணியாளர்களுக்கும், இரவு நேர டிபன் கடைகளுக்கும் அதிக விலைக்கு விற்க கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் 1500 கிலோ ரேஷன் அரிசி, அதை கடத்த பயன்படுத்திய வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
Job Suitcase

Jobs near you