திருச்சி, அரியமங்கலம் பெரியார் தெரு அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (64). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் திங்கள்கிழமை இரவு காட்டூர் கைலாஷ்நகர் பகுதியில் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தார். அவரை திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
அவரது உடலில் இருந்த காயங்களை வைத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் பொன்ராஜை சிலர் தாக்குவது பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அரியமங்கலம் முத்துநகரைச் சேர்ந்த நிஷாந்த் (27) என்பவர் தனது நண்பர்களான திருநெடுங்களம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பாரதிராஜா (24), அரியமங்கலம் அம்மாகுளத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (18) உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து பொன்ராஜை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
பொன்ராஜின் உறவுப்பெண் ஒருவருக்கும் நிஷாந்துக்கும் முறையற்ற தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் அவரை கொலை செய்ததாகவும் நிஷாந்த் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக விசாரிக்க முயன்றதுமே ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிரசன்னா (20), குணசேகர் (21) ஆகிய இருவரும் திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.