பொன்மலை ரயில்வே பணிமனையில், கீழகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் எம்எம்டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை பிற்பகலில் பணி முடிவடைய சிறிது நேரமிருந்த நிலையில், பணிமனையின் உள்பகுதியில் உள்ள 3-ஆவது ஷண்டிங்க் பாதையில், அவர் ரயில் என்ஜினுக்கு அடியில் சடலமாக கிடப்பதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது.
முருகனின் உடல் சந்தேகத்துக்கிடமான வகையில் ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் துண்டான நிலையில் கிடந்தது. தொழிலாளர்கள் சந்தேகம்: பணிமனை உள்பகுதியில் உள்ள ரயில் பாதையில், பராமரிப்பு பணிகளுக்கு வரும் ரயில் என்ஜின்கள் மிகவும் மெதுவாகவே வரும். அவ்வாறிருக்க, முருகேசன் தற்கொலை செய்யும் நோக்கில் படுத்திருந்தால் ரயில் ஓட்டுநர் என்ஜினை நிறுத்தியிருக்க முடியும் அல்லது அவர் திடீரென குறுக்கே பாய்ந்திருந்தால் கூட, உடல் சிதைந்துதான் இறந்திருக்க கூடும்.
ஆனால் முருகனின் உடலின் ஒருபகுதி வெளியிலும் இடுப்புக்கு மேல்பகுதி தண்டவாளத்தின் நடுவிலும் உள்ள நிலையில் கிடந்தது தொடர்பாக தொழிலாளர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப் பதிந்து, முருகன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.