மணப்பாறை அருகே உள்ள செக்கனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி விஜயலட்சுமி. கணேசன் வையம்பட்டியில் பருத்தி மண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி என்பவர் செக்கனம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் தங்களது TVS XL இருசக்கர வாகனத்தில் வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியவிட்டு, திண்டுக்கல் முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து பூ ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற ஐச்சர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் இருவருக்கும் தலை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணவன் மனைவி இருவரும் இறந்து விட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. வையம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.