இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் சமீபகாலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் கணிசமாக உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும், சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கொரோனாவுக்காக பயன்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது பரவும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் உள்ளனர். ஆபத்தான நிலையில் இல்லை. இந்தாண்டு திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துதான் இருக்கிறது. ஒரே பகுதியில் அதிகமானோருக்கு காய்ச்சல் இருந்தால், அதற்கேற்றார்போல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.