பழனி பஞ்சாமிா்தம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருச்சி, பழனி உள்பட பல்வேறு இடங்களில் திரைப்பட இயக்குநா் மோகன் ஜி மீது புகாா் அளிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் மேலாளா் கவியரசு, சமயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
இதையடுத்து, சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சென்னை சென்று, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து மோகன்ஜியைக் கைது செய்தனா்.
தொடா்ந்து அவரை திருச்சி அழைத்து வந்து, திருச்சி மாவட்ட 3-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆஜா்படுத்தினா். இது தொடா்பாக, விசாரணை மேற்கொண்ட நீதிபதி பாலாஜி, முதல் நாள் கைது செய்து, இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை அவரை ஆஜா்படுத்தியுள்ளார்கள்.
மேலும், மோகன்ஜியைக் கைது செய்வதற்கான காரணங்கள் குறித்து முறையாகப் பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, அவரை சொந்த பிணையில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டாா். மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளாா்.