திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மாரியப்பன் இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நிலுவையில் இருந்த ஊதிய தொகை மற்றும் ஊக்கத் தொகையைப் பெற்றுத் தர அப்பள்ளியில் பணிபுரிந்த ஊழியர் ரங்கராஜன் என்பவர் 2000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரியப்பன் இதுகுறித்து கடந்த 2009 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் லஞ்சம் பெறும்போது ரங்கராஜன் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ரங்கராஜனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.