திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த 31 வயதான கவுதம், திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு கணவரைப் பிரிந்து 7 வயது மகனுடன் வசித்து வந்த 29 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 3-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு மூலனூரில் வசித்து வந்தனர். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்கு ஆளான கவுதம், தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வாரங்களே ஆன நிலையில் ஏற்பட்ட தகறாறில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.