குண்டடம் அருகே கரிசக்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருடைய மனைவி ஷோபனாதேவி. இவர்கள் கடந்த 5-ம் தேதி உறவினர்கள் திருமணத்துக்கு சிவன்மலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் திருமணம் முடிந்து ஊருக்கு செல்ல பைகளை தங்களுடைய காரில் வைத்துக்கொண்டு கிளம்பிச் சென்றனர்.
ஊரில் சென்று பார்த்தபோது பைக்குள் இருந்த நகைகளில் 10 பவுன் கொண்ட ஒரு நகை மட்டும் இல்லை. இதனால் மீண்டும் மண்டபத்தில் வந்து தேடிப் பார்த்தனர். அப்போதும் கிடைக்கவில்லை. பின்னர் சிசிடிவி கேமராவை பார்த்த போது இவர்கள் காரில் பைகளை வைத்து விட்டு மீண்டும் மண்டபத்திற்குள் செல்லும்போது விலை உயர்ந்த காரில் வந்த மர்ம நபர்கள் நகையை திருடிச் செல்வது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே காங்கேயம் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த திருட்டில் ஈடுபட்ட ராசுகுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 42) ரவிக்குமார் (37) ஆகிய இருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அதில் காரில் இருந்து நகையை எடுத்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடம் இருந்த 10 பவுன் நகை மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.