வெள்ளகோவில் ரமேஷ் அத்தாம்பாளையத்தில் காட்டன் மில் நடத்தி வருகிறார். மில் வளாகத்தில் உள்ள குடோனில் விவசாயத்திற்கு பயன்படும் மானிய விலை யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுடில்லியிலிருந்து மத்திய அரசின் உரக்கட்டுப்பாட்டு துணைச் செயலாளர் சத்திரம் மீனா, கோவை வேளாண்மை துறை கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல், ஈரோடு வேளாண்மை துறை உதவி இயக்குனர் சரஸ்வதி, திருப்பூர் வேளாண் தர கட்டுப்பாட்டு அலுவலர் சீதா, ஆகியோர் காவல் துறையினருடன் அந்த குடோனுக்கு சென்றனர்.
45 கிலோ எடை கொண்ட 3,210 மானிய விலை யூரியா மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதன் உரிமையாளர்கள் ரமேஷ் அவருடைய தம்பி தாமரைக்கண்ணன் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் யூரியாக்களை ஒரு மூட்டைக்கு ரூ.256.50 வாங்கி அவற்றை சொந்த லாரிகளில் கொண்டு வந்து பின்னர் அவற்றை தலா 50 கிலோ அளவு மூட்டைகளாக மாற்றி பல்வேறு மாநிலங்களுக்கு மூட்டை ரூ.1500 என்று விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர்.
இருவரும் தலைமறைவாகி விட்டனர். யூரியா மூட்டைகள் மற்றும் லாரி, வேன் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், திருப்பூர் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் வந்து இரவு முழுவதும் ஆய்வு செய்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.