முத்தூர்: சர்க்கரைபாளையம் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

66பார்த்தது
முத்தூர்: சர்க்கரைபாளையம் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா
முத்தூர் அருகே உள்ள சக்கரைப்பாளையம் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சர்க்கரை பிள்ளையார் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலும் கடந்த 6-ஆம் தேதி இரவு 7 மணிக்கு கோவிலில் பூச்சாட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கொண்டு சக்கரைப்பாளையம் சர்க்கரை பிள்ளையார் கோவிலை வந்தடைந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் மாலை 6 மணிக்கு பகவதி அம்மனுக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் இரவு 9 மணிக்கு பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இன்று 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மறு அபிஷேக பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.