இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா மற்றும் நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் SIR திருத்தம் காரணமாக 3 தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுகள் மாயமானதாக புகார் மனு அளித்தனர். ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் திருப்பூர் சட்டமன்ற தொகுதியாக இருந்த பகுதிகள் தற்போது திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் என 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 2001 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2001 உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் 2002 திருத்தப்பட்டியலில் இல்லாததால், மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறுபான்மை சமுதாய மக்களின் வாக்குகள் மற்றும் மற்ற மதத்தை சேர்ந்த வாக்காளர்கள் என சுமார் 10 ஆயிரம் வாக்குகள் மாயமாகி உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.