தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956 டிசம்பர் 27-ம் தேதியை நினைவுகூரும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குனரின் ஆணைப்படி திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்டவாரம் கடந்த 18-ம் தேதி முதல் வருகிற 27-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் 5-ம் நாள் நிகழ்வான நேற்று தொழிலாளர் துறை மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை தமிழில் வைத்திட வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) ஜெயக்குமார் விளக்கவுரையாற்றினார். தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் தேசுதாசு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திருப்பூர் மாவட்ட செல்போன் ரீடைலர்ஸ் மற்றும் மொத்த விற்பனை சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேக்ஒளி, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாவட்டச் செயலாளர் லாலா கணேசன், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர்.