தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன்ஜெயராம் தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 9-ந்தேதி பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் முழுமையாக பங்கேற்க வேண்டும். கல்வித்துறை அமைச்சு பணியாளர்களுக்கு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பி.எட் பட்டம் பெற்ற அனைத்து அமைச்சு பணியாளர்களும் வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அனைத்து தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கும் முடக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். தகுதி பெற்ற அனைத்து அமைச்சு பணியாளர்களுக்கும் கல்வித் தகுதிக்கேற்ப ஆசிரியர் பணிமாறுதல் நியமனங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ம் கட்ட போராட்டங்கள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் மாநில துணைத் தலைவர்கள் ரோஜஷ், செல்வகுமார், தேவசேனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.