திருப்பூர் காவிலிபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 60). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ரங்கசாமி உடன் கடந்த 22-7-2008 அன்று நடைபாதை பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாலசுப்பிரமணியம், ரங்கசாமியை தாக்கியதில் அவர் பல் உடைந்தது. மேலும் யுவராஜ் என்பவரையும் தாக்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொடுங்காயம் ஏற்படுத்திய குற்றத்துக்கு பாலசுப்பிரமணியத்துக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு முருகேசன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ரேவதி ஆஜராகி வாதாடினார்.