திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மங்கலம் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பள்ளிக்கூடம், கோவில் அருகே இந்த கடை அமைந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். புதிதாக டாஸ்மாக் கடையை எங்கள் பகுதியில் திறக்க அனுமதிக்க வேண்டாம்' என்று கூறியுள்ளனர். பல்லடம் இச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் கிறிஸ்தவ, ஆதிதிராவிட மக்கள் 200 குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம்.
அதிகாரிகளும் ஆய்வு செய்து நிலத்தை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.