சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் 28-ந் தேதி நடைபெறும் தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குரு பூஜையில் கலந்துகொள்ள பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்ததன் பேரில் தே.மு.தி.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி.ஆர். குழந்தைவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞர் அணி துணைச்செயலாளர் ராயபுரம் பா.ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் ஆர்.பி. சரவணகுமார், மாவட்ட பொருளாளர் பொட்டு எஸ்.பி. காளியப்பன் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கழகத்தில் புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி.ஆர். குழந்தைவேலை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 28-ந் தேதி சென்னையில் நடைபெறும் குரு பூஜையில் மற்றும் ஊர்வலத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டது.