சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரத்திற்கு ஏற்படும் சீர்கேடுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? குப்பைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் குப்பைத் தொட்டி இல்லாத பகுதிகளில் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒருசில நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது.
அப்பகுதியை சுற்றி இருப்பவர்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்டவை ஏற்படுகிறது. குப்பைகளில் உணவு தேடி வரும் ஆடு, மாடு மற்றும் நாய் ஆகியவை பிளாஸ்டிக் கழிவுகளை தின்றதால் அவைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்து கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்படுவதற்கும் முக்கிய காரணமாகி விடுகிறது. எனவே திருப்பூரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.