தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகனவள்ளி மேற்பார்வையில் வருகிற 14-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கோர்ட்டுகளில் காலை 10 மணிக்கு நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் 8 அமர்வுகளும், அவினாசி, காங்கயம், தாராபுரம், பல்லடத்தில் தலா 2 அமர்வுகள், உடுமலையில் 4 அமர்வுகள் என மொத்தம் 20 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இதில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், நில அபகரிப்பு அசல் வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.