திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில், அவினாசி அருகே தெக்கலூர் காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், தங்கள் கிராமத்தில் 400 குடும்பங்கள் வசிப்பதாகவும், குடியிருப்புக்கு அருகில் 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடை இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்தக் கடைக்கு முன்பாக உள்ள வீதி வழியாகவே மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்வதாகவும், மது பிரியர்களால் ஆடுகள் திருடப்படுவதாகவும், பெண்கள் ஆடு மேய்க்கச் செல்லும்போது சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.