உடுமலை அடுத்த சின்னவாளவாடியில் இருந்து பெரியகுளம் கரையை ஒட்டியவாறு உடுமலை- திருமூர்த்திமலை சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலையின் நுழைவு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை கடந்து செல்லும் வகையில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. ஆனால் பக்கவாட்டு சுவர் கட்டவில்லை. இதனால் விபத்தை ஏற்படுத்தும் அபாயகுழியாக கழிவுநீர் கால்வாய் மாறியது.
குறிப்பாக பஸ் மற்றும் கனரக வாகனங்கள் திரும்பிச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. அத்துடன் இரவு நேரத்தில் கழிவுநீர் கால்வாய் இருப்பது தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் 24 எண் கொண்ட அரசு பஸ் கழிவுநீர் கால்வாயில் இறங்கியது. இதனால் பயணிகள் அச்சத்துக்கு உள்ளானார்கள். ஆனால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நீண்ட போராட்டத்திற்குப் பின்பு ஒரு வழியாக பஸ் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உயிர் இழப்பு ஏற்படும் முன்பு தரைமட்ட பாலத்திற்கு பக்கவாட்டு சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.