திருவண்ணாமலை ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா

85பார்த்தது
திருவண்ணாமலை ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் கற்றான்குளம் கிரிவலப் பாதையில் பழைமை வாய்ந்த ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுர பொம்மைகள் உடைந்தும் காணப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, கோயில் அருகே வியாழக்கிழமை மாலை யாகசாலை அமைத்து விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, புண்யாஹவாசனம், கணபதி ஹோமம், தம்பதி சங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம், பூர்ணாஹூதி, தீபாராதனை, காலகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை, கலச பூஜைகள், சக்தி விநாயகர் மூலமந்திர ஹோமங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள், கணபதி சகஸ்ர நாம பூஜைகள், விஷேச மூலமந்திர ஹோமங்கள், நாடிசந்தானம், யாத்ராதானம், கடம்புறப்பாடு, விமான ஸ்தூபி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வி.எம்.டி. வெங்கிடேசன், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் கணேசன், தேவிகாபுரம், தொழிப்பேடு, ஆத்துரை, மூலபுரவடை, ஊத்தூரான்புரவடை, மலையாம்புரவடை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி