ஆரணி: நீச்சல் பழகச் சென்ற பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

51பார்த்தது
ஆரணி: நீச்சல் பழகச் சென்ற பள்ளி மாணவிகள் உயிரிழப்பு
ஆரணி அருகேயுள்ள சதுப்பேரிபாளையத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் சிவரஞ்சனி (15), மேகநாதன் மகள் மோனிஷா (15) மற்றும் இவர்களது தோழிகள் தன்ஷிகா, வர்ஷினி. இவர்கள் ஆரணி அருகேயுள்ள தச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை தினம் என்பதால் நான்கு பேரும், அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள நேற்று பிற்பகல் சென்றனர். நான்கு பேரும் கிணற்றில் குளித்துக் கொண்டு நீச்சல் பழகிக் கொண்டிருந்தபோது, சிவரஞ்சனி, மோனிஷா ஆகியோரின் உடைகள் சேற்றில் சிக்கிக் கொண்டன. இதனால், இருவரும் தத்தளித்தனர். அவர்களை தன்ஷிகா, வர்ஷினி ஆகியோர் மீட்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக இருவரும் கிணற்றுக்கு மேலே வந்து கூச்சலிட்டனர். அந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வந்து மீட்க முயற்சித்தனர். இருப்பினும், மாணவிகள் இருவரும் நீரில் மூழ்கினர். ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலர் பூபாலன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் இருந்து சிவரஞ்சனி, மோனிஷா இருவரையும் சடலமாக மீட்டனர். தகவலறிந்த களம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளின் சடலங்களைக் கைப்பற்றி, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி