திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 44), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பவானி. இவர்களது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்கள் ஞானசம்பந்தம் - மகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் சத்யா (வயது 20), மனநிலை பாதிக்கப்பட்டவள். ஞானசம்பந்தம், மகேஸ்வரி ஆகியோர் கூலி வேலை செய்து வருவதால் மகள் சத்யாவை பகலில் வீட்டில் விட்டு வேலைக்குச் சென்று வருவர்.
இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சத்யாவை வீட்டின் உரிமையாளர் பிரகாஷ், பஜ்ஜி வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. வேலை முடிந்து வீடு திரும்பிய மகேஸ்வரி, மகள் சத்யா சோர்வாக இருப்பதைப் பார்த்து, அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் சத்யாவை அழைத்துச் சென்றதை தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பிரகாஷின் மனைவி பவானியிடம் கேட்டதற்கு வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சத்யாவின் பெற்றோர் திருவண்ணாமலை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் புகார் கொடுத்தனர். பின்னர், அத்துறையிடமிருந்து ஆரணி மகளிர் போலீசாருக்கு புகார் வந்தது. காவல் ஆய்வாளர் பிரபாவதி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, சத்யாவை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரகாஷையும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி பவானியையும் நேற்று கைது செய்தார்.