திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலம் 55 வயதுக்குள்பட்ட அடிப்படை கல்வியறிவு பெற்ற முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாக ரூ. ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் வருமான உச்சவரம்பு இல்லாமல் முன்னாள் படைவீரர்கள், ராணுவப் பணியின்போது இறந்த படைவீரர்களின் மறுமணமாகாத விதவைகள், முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த திருமணமாகாத மகள்கள், முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த மறுமணமாகாத விதவை மகள்கள் பயன்பெறலாம். தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். கடன் பெற தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.