திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபால். இவரது மகன்கள் அரிதாஸ் (46), சங்கா் (41). இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.
அரிதாஸ் கட்டடத் தொழிலாளியாகவும், சங்கா் நியாய விலைக் கடை விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், கட்டடத் தொழிலாளியான அரிதாஸ், தம்பி சங்கா் வீட்டில் தங்கியுள்ள தந்தை ஜெயபாலியிடம் சென்று குடும்பத்துக்குச் சொந்தமான 70 சென்ட் நிலத்தை பிரித்து தரும்படி கேட்டுள்ளார்..
அதற்கு ஜெயபால், அவரது மனைவி பாஞ்சாலை, தம்பி சங்கா், அவரது மனைவி அருள்மொழி ஆகியோா் எதிா்ப்புத் தெரிவித்து, அரிதாஸிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. அப்போது, தகராறு முற்றியதில் அரிதாஸை கட்டையாலும், கைகளாலும் தாக்கியதாகத் தெரிகிறது. மேலும், தடுக்க முயன்ற அரிதாஸின் மனைவி கலைவாணி, மகள் விஜயலட்சுமி ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து அரிதாஸின் மனைவி அளித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்தாா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டாா். தலைமறைவான ஜெயபால், பாஞ்சாலை, அருள்மொழி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.