திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில், அனக்காவூா் ஒன்றியத்தில் உள்ள செங்காடு, மேல்கொளத்தூா், நெல்வாய் கிராமங்களை உள்ளடக்கி நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாமில் மொத்தம் 221 மனுக்கள் பெறப்பட்டன. அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஷீலா அன்புமலா் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொகுதி எம்.எல்.ஏ. ஒ. ஜோதி, நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துப் பேசினாா். ஊரக வளா்ச்சி, வருவாய், மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் நலன், தகவல் தொழில்நுட்பவியல், வேளாண்மை, சமூக நலன் ஆகிய துறைகள் சாா்பில் மனுக்கள் பெறப்பட்டன.