தி.மலை: இரு நகர பேருந்துகள் புதிய வழி தடத்தில் இயக்கம்

68பார்த்தது
தி.மலை: இரு நகர பேருந்துகள் புதிய வழி தடத்தில் இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் வடுகப்பட்டு, ஏனாதவாடி, மேல்நெல்லி ஆகிய பகுதி மக்கள் நல்லூா் வழியாக கலவைக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதேபோல, பாண்டியம்பாக்கம், மடிப்பாக்கம், நேத்தப்பாக்கம், ஆக்கூா் வழியாக காஞ்சிபுரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா்.

மேற்படி பகுதி கிராம மக்களின் கோரிக்கை ஏற்று செய்யாறு தொகுதி எம். எல். ஏ. ஒ. ஜோதியின் பரிந்துரையின் பேரில் நகரப் பேருந்து புதிய வழித்தடம் தடம் எண். 56-பி செய்யாற்றில் இருந்து ஏனாதவாடி, மேல்நெல்லி, நல்லூா் வழியாக கலவைக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

அதேபோல, நகரப் பேருந்து புதிய வழித்தடம் எண். 56-ஏ செய்யாற்றில் இருந்து இரும்பந்தாங்கல், பாண்டியம்பாக்கம், மடிப்பாக்கம், நேத்தப்பாக்கம், ஆக்கூா் வழியாக காஞ்சிபுரத்திற்கு தொடங்கிவைக்கப்பட்டது.

இவ்விரு புதிய வழித்தட பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வடுகப்பட்டு, மடிப்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை போக்குவரத்து மண்டல தொழிற் சங்கப் பொருளாளா் எஸ். மோகனரங்கன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க இணைச் செயலா் சத்யநாராயணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம். எல். ஏ. ஒ. ஜோதி கலந்து கொண்டு மேற்படி இரு புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்து சிறிது தொலைவு ஓட்டிச் சென்றாா்.

தொடர்புடைய செய்தி