திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னிதிக்குப் பின்புறம் 2-ஆம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி சன்னிதியில் உள்ள மூலவருக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீவேணுகோபால சுவாமி சன்னிதியில் இருந்து தீபம் ஏற்றிய மடக்கையை கோயில் சிவாச்சாரியார்கள் தங்களது கைகளில் ஏந்திக்கொண்டு பரமபதவாசலின் வழியாக வெளியே வந்தனர். பின்னர், மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர மலையை நோக்கி மடக்கையில் ஏற்றப்பட்ட தீப தரிசனத்தைக் காண்பித்தனர். நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.