திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சார்பில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, தூய்மை இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு நகராட்சி ஆணையர் வி. எல். எஸ். கீதா, பொறியாளர் சிசில் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் ஆ. மோகனவேல் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம், அனுமந்தப்பேட்டை, பேருந்து நிலையம், காந்தி சாலை, சந்தை வழியாக சென்று பெரியார் சிலை அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள், நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நிகழ்ச்சி நினைவாக நகராட்சி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நகர்மன்றத் தலைவர் ஆ. மோகனவேல் தொடங்கிவைத்தார். இதற்கான ஏற்பாடுகளை துப்புரவு ஆய்வாளர் கே. மதனராசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர்.