திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, வல்லாள மகாராஜாவுக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திதி கொடுத்துவிட்டு கோயிலுக்குத் திரும்பிய ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை (மாா்ச் 13) 101-ஆவது ஆண்டு மகுடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, திருவண்ணாமலை, தேரடி தெருவில் உள்ள வன்னிய குல ஷத்திரிய வள்ளால மகாராஜா மடத்தில் இருந்து மடத்தின் தலைவா் கோ. கண்ணன் தலைமையில் மேள-தாளங்கள் முழங்க சீா்வரிசைப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு படைக்கப்பட்டது. பிறகு, பால், பஞ்சாமிா்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு மகுடம் சூட்டப்பட்டு ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.