திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா சமத்துவ நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் மு. பெ. கிரி, பெ. சு. தி. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சேர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 483 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 130 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 17 பேருக்கு உள்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகள், 10 பேருக்கு வாரிசு சான்றிதழ்கள், 2 பேருக்கு விதவைச் சான்றிதழ்கள் என வருவாய்த் துறை சார்பில் மட்டும் 715 பேருக்கு ரூ. 8 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கு. பிச்சாண்டி வழங்கினார்.
இதேபோல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாநில, ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.