திருவண்ணாமலையில் அண்ணாமலையாரே மலை வடிவாக எழுந்தருளியிருப்பதால், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, வைகாசி மாத பௌர்ணமி வரும் 10ம் தேதி பகல் 12.32 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி பகல் 1.58 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 10ம் தேதி இரவு கிரிவலம் செல்ல ஏதுவாக உள்ளது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபகாலமாக பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக, கடந்த மாதம் கோடை விடுமுறை காலம் என்பதால், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாடு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகையால் திருவண்ணாமலை நகரம் திணறியது. இந்நிலையில், இந்த மாத பௌர்ணமிக்கும் பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் விரிவாக செய்ய மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் திட்டமிட்டுள்ளன. மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.