திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா அருகே, பாரம்பரிய விதைகள் மையம் சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, இயற்கை ஆர்வலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இயற்கை ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.
பெண்கள் இணைப்புக் குழுவின் மாவட்ட நிர்வாகி சுமதி, இயற்கை விதை சேகரிப்பாளர்கள் சந்திரசேகரன், முரளி ராஜ், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் பழனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசினர். தொடர்ந்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கை வேளாண்மையை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோர் அண்ணா நுழைவு வாயில், வேங்கிக்கால் வழியாக நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாகச் சென்று இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.