திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நேற்று வந்த ஒரு ஆணும், பெண்ணும் கோயிலின் உட்புறம் ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து ஒரு பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்த பார்சல் உணவை எடுத்து உண்டனர். அந்த வழியாகச் சென்ற சிலர் அவர்களை பார்த்தபோது அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது போல தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிலர் கோயில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அங்கே வந்த அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவர், சைவ உணவு உண்டதாக கூறப்படும் அந்த ஆண் பக்தரிடம் விசாரணை செய்தார். அப்போது அவர் தாம் கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்துக் காட்டி, இது சைவம்தான் என்று கூறியுள்ளார். மேலும் சாப்பிட்டு முடித்த வெறும் இலை ஒன்றை காண்பித்தார்.
அதில் வைத்து அசைவ உணவு சாப்பிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அறநிலையத்துறை அதிகாரிக்கு எழுந்தது. இதனையடுத்து அறநிலையத்துறையின் சார்பில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அசைவ உண்டதாக கூறப்படும் இருவரையும் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.