திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (24). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அப்போது, திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கூறி அந்தச் சிறுமியை கல்யாணசுந்தரம் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார்.
இதையறிந்த கல்யாணசுந்தரம், சிறுமியிடம் உனக்கு 18 வயது ஆனபிறகு, திருமணம் செய்து கொள்கிறேன். அதனால், கருவை கலைத்துவிடு என வாக்குறுதி கூறியதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், தேவபாண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடைக்கு அந்தச் சிறுமியை கல்யாணசுந்தரம் அழைத்துச் சென்று கடையில் பணிபுரிந்த மருந்தாளுநர் சிவா ஆனந்தன் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தார்.
இதன்பிறகு சிறுமியிடம் பேசுவதை கல்யாணசுந்தரம் தவிர்த்து வந்ததால் மனமுடைந்த சிறுமி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், சிறுமியை காதலித்து வாக்குறுதி கூறி கல்யாணசுந்தரம் ஏமாற்றியதும், மருந்தாளுநர் சிவா ஆனந்தன் சிறுமிக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கல்யாணசுந்தரம், மருந்தாளுநர் சிவா ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மருந்துக் கடையில் இருந்து கருக்கலைப்பு செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.