உலக நன்மை வேண்டி, செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்கு, உலக நன்மை வேண்டி மகா சண்டி யாக பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அன்று காலை 8 மணியளவில் கோ பூஜையும், மாலையில் சத்யநாராயண பூஜையும் நடைபெற்றன.
புதன்கிழமை காலை ராணிப்பேட்டை சிப்காட் வித்யா பீடத்தின் குருஜீ பாரதி முரளிதர சுவாமிகளுக்கு செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தின் சுவாமி ஆத்மானந்தா செந்தில் சுவாமிகள் பாத பூஜை செய்து வரவேற்றார்.தொடர்ந்து, 20 பட்டாச்சாரியர்கள் கொண்ட குழுவினர் 108 ஹோம திரவங்களை யாக சாலையில் ஊற்றி யாக பூஜை செய்தனர். இதில், செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மூகாம்பிகையம்மனை வழிபட்டனர்.சண்டி யாகத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு செங்கம் மூகாம்பிகையம்மன் பீடம் சார்பில், ஆத்மானந்தா செந்தில் சுவாமிகள் குங்குமம், வளையல் உள்ளிட்டவற்றை வழங்கி ஆசி வழங்கினார்.