திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள கோவிலூர் கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆதி சிவன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (பிரதோஷம்) கட்டுமானப் பணியின்போது, பணியாளர்கள் தோண்டியபோது மண் பானையில் சுமார் 103 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கோயில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் காவல் நிலையம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நாணயங்கள் மன்னர் காலத்தில் வைக்கப்பட்டதா அல்லது மூன்றாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் என்பதால் வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கண்டுபிடிப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.