தி.மலை: வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

69பார்த்தது
தி.மலை: வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
திருவண்ணாமலையில் உள்ள செங்கம் சாலையும், கிரிவலப் பாதையும் இணையும் இடத்தில் ரூ.1 கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை - செங்கம் சாலை மற்றும் கிரிவலப் பாதை சந்திப்புப் பகுதியில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி மதிப்பில் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகளை அகற்றும் பணி, சாலைகளை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டன. இந்தப் பணியில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளர் ப. ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளர் கே. அன்பரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வெளிவட்டச் சாலை அமையும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகளை அகற்றினர். கிரிவல பக்தர்களின் நெரிசலைத் தவிர்க்கவும், போக்குவரத்து வசதிக்காகவும் இந்தப் பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி