திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை (3. 12. 2025) மாலை 6 மணிக்கு 2, 668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இந்த தீபத் திருவிழாவைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தரமான உணவு மற்றும் சுகாதாரம் உறுதி செய்ய உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், திருட்டைத் தடுக்க சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 1,060 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 61 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் தர்ப்பகராஜ் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெளிநாடு, பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.