திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பிஞ்சூர் அரசு நடுநிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர் குல்சார்பேகம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் மாணவர்களின் வருகைப் பதிவேடு, காலை உணவுத் திட்டம், சத்துணவுக்கூடம், மதிய உணவு போன்றவைகளை ஆய்வு செய்தார்.
மேலும், மாணவர்களின் கல்வித்தரம், ஒழுக்கம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்த அவர், மாணவர்கள் படிப்பு உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பாக இருப்பதாகவும், பள்ளி நிர்வாகத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதாகவும் கூறி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை பாராட்டினார். தலைமை ஆசிரியருக்கு பாராட்டு முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலர்கள் (ஓய்வு)அமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில், பிஞ்சூர் அரசு நடுநிலைப் பள்ளி சிறப்பாக செயல்படுவதை பாராட்டி சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
இதை அறிந்த தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் தலைமை ஆசிரியர் குல்சார்பேகத்துக்கு சால்வை அணித்து பாராட்டினார். அப்போது, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜவேலு, உதவி ஆசிரியர்கள் சுகன்ராஜ், அமுதா உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.