திருவண்ணாமலை: மரக்கன்றுகளை வளா்த்து சுற்றுச்சூழலை காக்க வேண்டுகோள்

55பார்த்தது
திருவண்ணாமலை: மரக்கன்றுகளை வளா்த்து சுற்றுச்சூழலை காக்க வேண்டுகோள்
பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் வலியுறுத்தினார்.திருவண்ணாமலை, அடிஅண்ணாமலை காப்புக்காடு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியும், விதைப் பந்துகள் தூவும் நிகழ்வும் நடைபெற்றது.உலக வன தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்க் தலைமை வகித்தார்.மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.பிறகு, பள்ளி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து விதைப் பந்துகளைத் தூவினார். 

முன்னதாக மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவர் பேசியதாவது:இந்தியாவில் காடுகள் கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றுடன் பல்லுயிர் பெருக்கத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன.காடுகளின் பாதுகாப்பு ஒரு சுற்றுச்சூழல் தேவை மட்டுமல்ல; ஒரு அடிப்படைப் பொறுப்பு. எனவே, பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் வருங்கால தலைமுறைக்கு வளமான வாழ்வை அளிக்க முடியும் என்றார்.நிகழ்ச்சியில், வட்டாட்சியர் கே. துரைராஜ் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்-ஆசிரியைகள், அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you