திருவண்ணாமலை: கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே காத்திருப்பு போராட்டம்

68பார்த்தது
திருவண்ணாமலை: கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் இந்தச் சங்கத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 54 விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து பொதுநகைக் கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன் பெற்றிருந்தனர். இந்த நிலையில், செயலர் கிருஷ்ணமூர்த்தியிடம் நகைகளை மீட்கச் சென்ற போது, விவசாயிகளுக்கு நகைகளை திரும்பத் தராமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட கூட்டுறவுத் துறையில் புகார் அளித்தனர். அதன்பிறகு, கூட்டுறவு செயலாட்சியர் தலைமையில் கடன் சங்கத்தில் ஆய்வு செய்தபோது போலி நகைகள் இருப்பதும், ரொக்கம் குறைவதும் தெரிய வந்தது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை சார்பில் செயலர் கிருஷ்ணமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்தனர். இதைத் தொடர்ந்து, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஜனவரி மாதம் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடத்தியபோது, வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி தலைமையில், சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு நகைகளை திரும்பத் தருவதாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு நகைகள் திரும்பக் கிடைக்காததால் மீண்டும் நேற்று கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி