வந்தவாசி: தீயில் சேதமடைந்த கோயில் தேரை புதுப்பிக்க ஆய்வு

63பார்த்தது
வந்தவாசி: தீயில் சேதமடைந்த கோயில் தேரை புதுப்பிக்க ஆய்வு
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, 2 தேர்கள் பங்கேற்ற தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேரோட்டம் முடிந்தவுடன் கோயில் எதிரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தகரக் கொட்டகையில் 2 தேர்களையும் நிறுத்தி பூட்டிவிட்டுச் சென்றனர். 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு தேரின் மேல்பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தகரக் கொட்டகையின் பூட்டை உடைத்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இதில், அந்த ஒரு தேரின் மேல்பகுதி எரிந்து சேதமடைந்தது. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தீயில் சேதமடைந்த தேரின் மேல்பகுதியை சீரமைத்து புதுப்பிக்க சென்னை இந்து சமய அறநிலையத் துறை திருத்தோர் தலைமை ஸ்தபதி தா. கஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, தேரின் மீது ஏறி சேதமடைந்த மேல் பகுதியை அவர் பார்வையிட்டார். ஆய்வின் போது இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை செயற்பொறியாளர் சங்கர், தேர் திருப்பணிக் குழுவினர் பானுகோபன், திலீப், கோயில் அர்ச்சகர் காா்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி