ஆம்பூர்: வனப்பகுதி விவசாயநிலத்தில் சிறுத்தை சென்றதாக பொதுமக்கள் பீதி

79பார்த்தது
ஆம்பூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திலிருந்து சாலையைக் கடந்து சிறுத்தை சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகிலுள்ள பாலூர் ஊராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு பகுதியில் சானாங்குப்பம் காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திலிருந்து சாலையைக் கடந்து புதர் பகுதியான நிலத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சிறுத்தை நடமாட்டம் மற்றும் கால் தடங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் வனத்துறையை ஒட்டியுள்ள கிராம மக்கள் வெளியில் வரும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும், இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்றும், கால்நடைகளையும் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம்பூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக எழுந்துவரும் தகவலால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி