அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா ரங்கநாதர் நகர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் வினித்குமார் (வயது 28). மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் கீழாச்சூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரது மகள் ஸ்ரீநிதி (20) என்ற பட்டதாரி பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று முன்தினம் இருவரும் புதுச்சேரிக்கு சென்று அங்குள்ள விநாயகர் கோவிலில் நண்பர்களை வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஸ்ரீநிதியின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் இருவரும் மேஜர் என்பதால் வினித்குமாருடன், ஸ்ரீநிதியை போலீசார் அனுப்பிவைத்தனர்.