குடியாத்தம் வனப்பகுதியில் யானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சைன குண்டாவில் இருந்து மோர்தானா செல்லும் கூட்ரோடு பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் சாலையில் சர்வ சாதாரணமாக ஒற்றை யானை நடமாடிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் ஒற்றை யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேற்கொண்டு செல்ல முடியாமல் அங்கேயே வாகனங்களை நிறுத்தி அமைதி காத்தனர்.
சற்று தூரம்வரை சர்வ சாதாரணமாக நடந்து சென்ற ஒற்றை யானை அதன் பின்னர் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அதைத்தொடர்ந்து அச்சத்தில் இருந்த கிராம மக்கள் அதன் பின்னர் அவசரம் அவசரமாக வீடு திரும்பினர்.
மாலை வேளைகளில் இப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையால் தொடர்ந்து அச்சத்தில் உள்ள கிராம மக்கள் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.