குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கே.வி.குப்பம் மேல்மாயில் ரோடு பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ் (வயது 37) என்பவரது வீட்டில் திடீரென சோதனை செய்தனர். அப்போது வீட்டு மாடியில் உள்ள ஒரு அறையில் ஏராளமான காலி மது பாட்டில்கள் இருந்தன. அவற்றில் ராணுவ கேண்டீனில் விற்கப்படும் மதுபாட்டில்களின் லேபிள்கள் இருந்தன.
பின்னர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. ராணுவ கேண்டீனில் முன்னாள் ராணுவ வீரர்கள் மதுவை வாங்கி அருந்தியபின் அவர்களிடம் காலி பாட்டில்களை ஜெயபிரகாஷ் சேகரித்துள்ளார். அந்த பாட்டில்களில் கர்நாடகாவில் இருந்து குறைந்த விலையில் வாங்கி வந்த மதுவை ஊற்றி போலியாக தயாரித்த லேபிள்களை ஒட்டி ராணுவ கேண்டீன் மது என பொய்யான தகவலை கூறி மாடுவிடும் விழா நடந்த இடங்களில் ஆட்களை வைத்து ஜெயபிரகாஷ் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயபிரகாஷை கைது செய்த போலீசார் இவரிடம் மதுவாங்கி விற்ற கேவி.குப்பம் வேப்பநேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (30), ஆலங்கனேரி பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் (30), போலி லேபிள் அச்சடித்து கொடுக்க உதவிய வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (27) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஏராளமான கர்நாடகா மதுபாட்டில்கள், காலி மது பாட்டில்கள், போலியாக அச்சடிக்கப்பட்ட லேபிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.