வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் கிறிஸ்டியான் பேட்டை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வேலூரை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். பேருந்தில் பயணித்த ஒருவர் வைத்திருந்த பையை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
அதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதம் ரைட்டா (வயது 49) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி ரயில், பேருந்து மூலம் சேலத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார், அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.